தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் காலாண்டு வருவாய் 9.1 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதன் பங்கு விலை 6 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ பங்கு 6.16 சதவீதம் உயர்ந்து ரூ.184.40-க்கு நிறைவடைந்தது. வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக ரூ.185.50-ஐ தொட்டது. தேசிய பங்குச்சந்தையில் 5.94 சதவீதம் உயர்ந்தது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,600.41 கோடி அதிகரித்து ரூ.1,82,654.52 கோடியாக உயர்ந்தது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் விப்ரோவின் செயல்பாட்டு வருவாய் 9.1 சதவீதம் உயர்ந்து ரூ.24,752.7 கோடியாக இருந்தது. இருப்பினும், நிகர லாபம் 1.40 சதவீதம் குறைந்து ரூ.3,200.6 கோடியாக பதிவானது.